மின்சாரத் தட்டுப்பாட்டால் தத்தளிக்கிறது தமிழகம். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி துவங்கிவிட்டால் பற்றாக்குறையை சமாளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் அப்பகுதி மக்கள். இச்சூழலில், மாநிலத்தின் மின் தேவையைப் பூர்த்தி சேய வேறு என்ன வழி என்பது குறித்து விவாதிக்க இத்துறை சார்ந்த வல்லுநர்களை அழைத்திருந்தோம்.
ஹரியானா மின்வாரியத் தலைவராகப் பணி ஓவு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.ஜி.தேவசகாயம், கல்பாக்கம் அணுமின் நிலையத்தைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் வி.கண்ணன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் கே.விஜயன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் கோ.சுந்தரராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். விவாதத்தை, ‘புதிய தலைமுறை’ ஆசிரியர் நெறிப்படுத்தினார். விவாதத்தில் இருந்து...
புதிய தலைமுறை
தமிழகத்தில் சொந்தமாக உற்பத்தி செய்யப்படுகிற மின்சாரத்தின் அளவைக் காட்டிலும், இரண்டு மடங்கு கூடுதலான மின்சாரம் வெளியில் இருந்து வாங்கப்படுகிறது. இங்கு சொந்த மின் உற்பத்தியை அதிகரிப்பதிலும் நிறைய பிரச்சினைகள் உள்ளன. உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிகள் என்ன?
தேவசகாயம்
மின்சாரத்தின் பயன்பாட்டை நிர்வகிப்பது, மின் தேவைகளை பூர்த்தி செய்வது ஆகிய இரண்டும் வெறும் உற்பத்தியைச் சார்ந்தது மட்டுமல்ல. மின்சாரத்தை உற்பத்தி செய்தல் (ஜெனரேஷன்), வேறு இடங்களுக்குக் கடத்துதல் (டிரான்ஸ்மிஷன்), விநியோகித்தல் (டிஸ்ட்ரிபூஷன்) ஆகிய மூன்று செயல்பாடுகளும் முக்கியமானவை. அதைவிட முக்கியமானது டெலிவரி. இங்குதான் நுகர்வோருடனான தொடர்பு வருகிறது. தற்போது டெலிவரி என்பது சிறப்பாகவோ, திறன் வாய்ந்ததாகவோ இல்லை. இதுதான் பிரச்சினைக்குக் காரணம். திறன் இன்மை (Inefficiency), தவறான நிர்வாகம் (mismanagement) ஆகிய இரண்டும் டெலிவரியில் இருக்கிறது. அனல்மின்சாரம், புனல்மின்சாரம், சூரியஒளி மின்சாரம் என எந்த மின்சாரமாக இருந்தாலும், விநியோகம் என்று வருகிறபோது மிகப்பெரிய பிரச்சினை இருக்கிறது. அதை சரிசெய்தாலே மின் பற்றாக்குறை தீர்ந்துவிடும்.
புதிய தலைமுறை
விநியோகத்தை சிறப்பான நிலைக்கு கொண்டு வந்துவிட்டாலும்கூட, எவ்வளவு மின்சாரத்தை சேமித்துவிட முடியும். ஏனெனில், நாம் உற்பத்தி செய்வதைக் காட்டிலும் இரண்டு மடங்கு கூடுதலாக வெளியில் இருந்து வாங்குகிறோமே.
தேவசகாயம்
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் 100 சதவிகித அளவுக்கு சொந்தமாக மின் உற்பத்தி செய்வது கிடையாது. 45 அல்லது 50 சதவிகிதம் தான் சொந்த உற்பத்தி. மீதியெல்லாம், மத்திய தொகுப்பில் இருந்தும், என்.டி.பி.சி.யில் இருந்தும் வருகிறது. தமிழ்நாட்டிற்கு நெய்வேலி நிலக்கரி கழகத்தில் இருந்து வருகிறது. விநியோகத்தை சீர்படுத்துவதன் மூலமாக 20 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் மின்சாரத்தை சேமிக்க முடியும். ஆனால், இதற்கான ஒரு சின்ன முயற்சியைக்கூட தமிழ்நாடு மின்சார வாரியம் செய்யவில்லை.
விஜயன்
விநியோகத்தில் நிறைய மின்சார இழப்பு ஏற்படுகிறது என்பது முழுக்க முழுக்க உண்மை. இதில் தொழில்நுட்ப ரீதியாக ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். உயரழுத்த மின்கம்பிகள், தாழ்வழுத்த மின் கம்பிகள் என இரண்டு விதமான கம்பிகள் உண்டு. தாழ்வழுத்த மின் கம்பிகள்தான் நுகர்வோரைச் சென்றடையும். இந்த இரண்டு கம்பிகளுக்குமான விகிதாச்சாரம் 1:1 என்று இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் கிலோமீட்டர் நீளத்திற்கு உயரழுத்த மின் கம்பிகளும், 5 லட்சத்து 40 ஆயிரம் கிலோமீட்டர் நீளத்திற்கு தாழ்வழுத்த மின் கம்பிகளும் உள்ளன. இதனால், கம்பி மூலம் ஏற்படும் மின்சார இழப்பு அதிகமாகவே இருக்கிறது.
புதிய தலைமுறை
இப்பிரச்சினையை சரிசெய்வது சாத்தியமான ஒன்றுதான். அதை ஏன் அரசு செய்யவில்லை?
விஜயன்
நிச்சயம் சாத்தியமானது தான். இதற்காக மத்திய அரசு ஏ.பி.டி.ஆர்.பி. என்ற பெயரில் ஒரு திட்டத்தையே கொடுத்துள்ளது. அத்திட்டத்தின் மூலம் தாழ்வழுத்த மின்கம்பிகளின் நீளத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு போதுமான நிதியை ஒதுக்கி, தேவையான ஏற்பாடுகளைச் செய்தாலே பெருமளவிலான மின்சாரத்தை சேமிக்க முடியும். ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.
புதிய தலைமுறை
அதற்கு என்ன காரணம்?
விஜயன்
நிர்வாகக் கோளாறுதான். தமிழகத்தில் 20 லட்சம் பம்புசெட்டுகள் உள்ளன. மோட்டார்களின் பாகங்கள் தரம்வாய்ந்ததாக இல்லை. அதனால், அவற்றை இயக்க கூடுதல் மின்சாரம் தேவைப்படுகிறது. இப்பிரச்சினை அரசு அறிந்ததுதான் என்றாலும், அதற்கான மாற்று ஏற்பாடுகளை இன்றுவரையில் செய்யவில்லை. இந்த மாதிரியான பிரச்சினைகளில் கவனம் செலுத்தினாலே, மின்சார இழப்பில் மூன்று சதவிகிதத்தைக் குறைக்க முடியும். அதன் மூலம் நமக்குத் தேவையான மின்சாரமும் கிடைத்துவிடும்.
புதிய தலைமுறை
இங்கு கிடைக்கிற இயற்கை ஆதாரங்களைக் கொண்டே தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்கிற விவாதங்கள் நடக்கின்றன. சூரிய ஒளி மின்சாரமோ, காற்றாலை மின்சாரமோ நமக்கு எவ்வளவு தூரம் கைகொடுக்கும்? அது நடைமுறையில் எந்தளவுக்கு சாத்தியம்?
தேவசகாயம்
நிலக்கரியை அடிப்படையாகக் கொண்ட அனல் மின்சாரம் 24 மணி நேரமும் உற்பத்தியில் இருக்கும். எனவே, அந்த மின்சாரத்தை தொடர்ந்து சப்ளை செய்து கொண்டே இருக்கலாம். சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை மின்சாரம் உள்ளிட்ட புதுப்பிக்கக்கூடிய மின்சாரத்தை நிறைய உற்பத்தி செய்ய முடியும். ஆனால் அதை சேமித்து வைப்பதற்கான தொழில்நுட்பம் நம்மிடம் இல்லை. அதனால், அந்த மின்சாரத்தில் 20 சதவிகிதத்தில் இருந்து 30 சதவிகிதத்துக்கு மேல் சேமித்து வைக்க முடியாது.
புதுப்பிக்கக்கூடிய மின்சாரத்தைப் பொறுத்தவரையில் அவற்றை தனித்தனியாக செய்துகொண்டிருக்கிறார்கள். ஒருவர் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்கிறார் என்றால், இன்னொருவர் காற்றாலை மின்சாரத்தை உற்பத்தி செய்கிறார். மற்றொருவர் பயோமாஸ் மின்சாரம் உற்பத்தி செய்கிறார். இந்த மூன்றையும் ஒருங்கிணைத்தால் நமக்கு ஏராளமான மின்சாரம் கிடைக்கும்.
சுந்தரராஜன்
காற்றாலை, பயோமாஸ் இந்த இரண்டுமே 80 சதவிகிதமான மின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். 1960ல் இருந்து இதுவரையில் அணுமின்சாரத்திற்கு பல லட்சம் கோடி ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளன. ஆனால், நமது தேவையில் 2.6 சதவிகிதத்தைத்தான் அணுமின்சாரம் தருகிறது. தமிழ்நாட்டில் உள்ள குண்டுபல்புகளை மாற்றினாலே 2000 மெகாவாட் மின்சாரம் சேமிக்க முடியும். தமிழகத்தில் 200 கி.மீ. அளவுக்கு கடற்கரைப்பகுதி இருக்கிறது. அதைப் பயன்படுத்தி நல்ல திறன்மிக்க மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
புதிய தலைமுறை
கடல் அலைகளில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான தொழில்நுட்ப உருவாக்கம் எந்தளவில் இருக்கிறது?
தேவசகாயம்
அந்த தொழில்நுட்பத்தைப் பொறுத்தளவில் இந்தியாவில் ஒரு முன்னேற்றமும் இல்லை.
விஜயன்
பண்ருட்டி ராமச்சந்திரன் மின்துறை அமைச்சராக இருந்தபோது, இதற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக மரக்காணம், தரங்கம்பாடி உள்ளிட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டத்தில் கருவேல மரங்கள் நிறைய இருப்பதால், அங்கு பயோமாஸ் மின் உற்பத்தி தொடங்குவது குறித்து பேசப்பட்டது. ஆனால், எதுவுமே நடைமுறைக்கு வரவில்லை.
புதிய தலைமுறை
புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியைத் தயாரிக்கலாம் என்று இவர்கள் கூறுகிறார்கள். அணு மின்சாரம் வேண்டும் என்று நீங்கள் சொல்வதற்கு காரணம் என்ன?
கண்ணன்
இன்றைய காலக்கட்டத்தில் மின்சாரத்தின் தேவை என்பது குறைவானதாக இருக்கலாம். தேவைக்கும் உற்பத்திக்குமான இடைவெளி குறைவானதாக இருக்கலாம். ஆனால் இன்னும் 50 ஆண்டுகள் கழித்து இந்த இடைவெளி மிகப்பெரியதாக இருக்கும். அப்போதுதான், எப்படியாவது மின்சாரம் கிடைத்தால் போதும், அது அணு மின்சாரமாக இருந்தாலும் சரி, வேறு எந்த மின்சாரமாக இருந்தாலும் சரி என்று மக்கள் நினைப்பார்கள். இருபது ஆண்டுகளுக்குப் பின்னர், நிலக்கரி தீர்ந்துபோன பிறகு, மற்ற ஆதாரங்கள் குறைந்துபோன நிலையில், மின்சாரத்திற்கு என்ன செய்வது என்பது தெரியாமல் விழிக்கும்போது, அணுமின்சாரம் இருந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று சிந்திப்பார்கள். அப்படியொரு தேவையை அறிந்துதான் அணுமின்சாரம் வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம்.
புதிய தலைமுறை
ஆனால் இன்றைக்கு அணுமின்நிலையத்தின் பாதுகாப்பு குறித்த அச்சம் மக்களுக்கு இருக்கிறது. ஃபுகுஷிமா விபத்துக்குப் பிறகு. கதிர்வீச்சு பற்றிய பயம் உருவாகி இருக்கிறது. தோல் வியாதிகள் முதல் புற்றுநோய் வரை வரும் என்று மக்கள் அஞ்சுகிறார்கள். கழிவுகளை கடலில் கொ,ட்டுவீர்கள், மீன் செத்துப்போகும், வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் பயப்படுகிறார்கள். இதற்கு உங்கள் பதில் என்ன?
கண்ணன்
அணுசக்தி என்பது புதிதாக வந்தது. ஹிரோஷியமா, நாகாசாகியில் தான் அணு பிரபலமானது. ஒரு பேரழிவு சம்பவத்தின் மூலம் தான் அணுவைப் பற்றியே நாம் கேள்விப்பட்டோம். எனவே, அணுவைப் பற்றிய எதிர்மறையான எண்ணங்கள் மக்களிடம் எழுவது இயல்பானதுதான். நீங்கள் சொன்னதுபோல பாதுகாப்பு பற்றி மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது அணுவிஞ்ஞானிகளுக்கும் அதிகரிகளுக்கும் முக்கிய கடமை. கல்பாக்கம் அணுமின் நிலையம் உருவாக்கப்பட்டபோது, அப்பகுதியில் குறைவான எண்ணிக்கையில் மீனவர்கள் இருந்தனர். இப்போது கட்டுமரங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. மீன் உற்பத்தியில் எந்தவித பாதிப்பும் கிடையாது. நீந்துகிற மீன்களில் கதிரியக்கம் இருக்கிறது என்று சொல்ல முடியாது. அது குறித்து நான் ஆய்வு செய்திருக்கிறேன். சென்னையில் உள்ள மீன்களிலும், கல்பாக்கத்தில் உள்ள மீன்களிலும், பாண்டிச்சேரியில் உள்ள மீன்களிலும் எவ்வளவு கதிரியக்கம் உள்ளது என்பதை ஆய்வு செய்தேன். மூன்று இடங்களில் உள்ள மீன்களில் உள்ள கதிரியக்க அளவு ஒரே மாதிரியாகத்தான் உள்ளன.
தேவசகாயம்
கூடங்குளத்தில் 25 ஆண்டுகளாக அணுமின்நிலையம் உருவாக்கப்பட்டு வருகிறது. இவ்வளவு நாளாக பெரியளவிலான அச்சம் அந்த மக்களிடம் இல்லை. புகுஷிமா விபத்துக்குப் பிறகு ஒருவிதமான பீதி உருவாகியுள்ளது. மேலும், அணுமின் நிலையத்தினர் நடத்திய பாதுகாப்புக்கான ஒத்திகை கிராம மக்களிடையே பெரும் பீதியைக் கிளப்பியது.
புதிய தலைமுறை
புகுஷிமா அணு உலைகள் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டவை. கூடங்குளம் அணு உலைகளுக்கும் புகுஷிமா அணு உலைகளுக்கும் என்ன வித்தியாசம்?
கண்ணன்
புகுஷிமா உலைகள் மிகவும் பழையவை. கூடங்குளத்தில் இருப்பது லேட்டஸ்ட் அணு உலைகள். சுனாமி வந்தால் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது என்பதெல்லாம் கூட கூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஆவணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது எங்கள் கடமை. துரதிஷ்டவசமாக மக்களிடம் பீதி கிளம்பிவிட்டது. இதையொரு பாடமாக எடுத்துக்கொண்டு எதிர்காலத்தில் மக்களுக்குப் புரியும் படியாக விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
புதிய தலைமுறை
ஒரு அணு உலை இருந்தால், விபத்து நடப்பதற்கான ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், விபத்து நிகழ்ந்தே தீரும் என்கிற கட்டாயம் கிடையாது. இரண்டாம் உலகப்போரில் பெரும் பாதிப்புகளை சந்தித்த பிறகுதான், அணுமின் உற்பத்திக்கு ஜப்பான் வந்த்து. புகுஷிமா விபத்துக்குப் பிறகும் அங்கு அணு உலைகள் வேலை செய்து கொண்டுதான் உள்ளன. இந்தியாவில் பல அணு உலைகள் பல ஆண்டுகளாக செயல்பட்டுக் கொண்டுள்ளன. அங்கு இதுவரை எந்த விபத்தும் நடைபெறவில்லை. நடப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதாலேயே அது கூடாது என்ற சொல்ல வேண்டுமா?
சுந்தரராஜன்
1981ல் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கொடுத்த சான்றிதழை அடிப்படையாக வைத்து, கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. அதன் பிறகு பொதுமக்களிடம் கருத்து கேட்பது போன்ற எந்தவொரு நடவடிக்கையும் இல்லை.
கண்ணன்
யூனிட் 1 மற்றும் யூனிட் 2 ஆகியவற்றுக்கு பொதுமக்களிடம் கருத்தறிய வேண்டும் என்று சொல்லவில்லை. அதனால் நாங்களும் அதைச் செய்யவில்லை. யூனிட் 3, யூனிட் 4, யூனிட் 5, யூனிட் 6 ஆகியவற்றுக்கு மக்களின் கருத்தை அறிய வேண்டும் என்று சொன்ன பிறகு, மூன்று முறை மக்களிடம் சென்று கருத்து கேட்டோம்.
புதிய தலைமுறை
அணு மின்சாரமே வேண்டாம் என்று சொல்கிறீர்கள். அணுமின்சாரம் இல்லாமல் நமது மின் தேவையை பூர்த்தி செய்ய முடியுமா?
தேவசகாயம்
நிச்சயமாக முடியும். காற்றாலை மின்சாரம் முதன் முதலில் ஆரம்பிக்கும்போது, ஒரு மெகாவாட்டுக்கு 4 ஏக்கர் தேவைப்பட்டது. இப்போது அதற்கு ஒரு ஏக்கர் போதும். ஹைட்ரஜன் எரிபொருள் குறித்த ஆராய்ச்சி மிகவும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. தொழில்நுட்பம் எல்லாம் வந்துவிட்டது. ஸ்டோரேஜ் மட்டும் வேண்டும். இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் அதைச் செய்துவிடுவார்கள். அதன் பிறகு, நமக்கு வேறு எந்த மின்சாரமும் தேவை இல்லை. வீட்டுக்குத் தனியாக, காருக்குத் தனியாக, தொழிற்சாலைகளுக்குத் தனியாக என்று அதை அமைத்துக்கொள்ளலாம். அது வந்துவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை. எல்லாமே ரீசார்ஜ் என்கிற நிலைமை வந்துவிடும். அதேபோல சூரிய ஒளி, காற்றாலை, பயோமாஸ் ஆகியவற்றை ஒன்றிணைத்து ஹைபிரிடாக மாற்றினால் நமக்குத் தேவையானதைக் காட்டிலும் கூடுதலாகவே மின்சாரம் கிடைக்கும்.
புதிய தலைமுறை
நிலக்கரி மூலம் மின் உற்பத்தியால் கார்பன் வெளியீடு, அதனால் பூமி வெப்பமடைதல், காலநிலை மாற்றம் என பல பாதிப்புகள் உள்ளன. எனவே, அனல் மின்சார உற்பத்தியை படிப்படியாக்க் குறைத்து வந்தால் அந்த இழப்பை சூரிய ஒளி மின்சாரமோ, காற்றாலை மின்சாரமோ பூர்த்தி செய்துவிடுமா?
தேவசகாயம்
சரியாக திட்டமிட்டு செய்தால் நிச்சயமாக முடியும். ஆனால், இந்தியாவில் இதுவரை அதைச் செய்யவில்லை.
புதிய தலைமுறை
சூரிய ஒளி மின்சாரத்தின் மூலம் ஒரு வீட்டில் இரண்டு விளக்குகளை எரிக்கலாம், வாட்டர் ஹீட்டருக்கு பயன்படுத்தலாம் என்று சொல்கிறார்கள். ஆனால், ஒரு டபுள் பெட்ரூம் வீட்டுக்கான முழுத்தேவைகளையும் சூரியஒளி மின்சாரம் நிறைவேற்றும் என்று யாரும் சொல்வதில்லையே?
சுந்தரராஜன்
நீங்கள் சொல்வது சோலர் பி.வி. இது சோலார் தெர்மல். அதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.
கண்ணன்
அது எல்லாமே வெறும் அறிவிப்புகளாகத்தான் இருக்கிறதே ஒழிய, முழு மூச்சாக எதுவும் செயல்படுத்தப்படவில்லை.
விஜயன்
இந்தியாவின் மின்சாரத் தேவையில் டிமாண்டுக்கும் சப்ளைக்கும் 30 சதவிகிதம் வித்தியாசம் இருக்கிறது. தமிழ்நாட்டிலும் அதுதான் நிலைமை. தேவைக்கு ஏற்ப மின்சாரத்தை உடனடியாக உற்பத்தி செய்ய முடியாததற்குக் காரணம், முழுக்க முழுக்க தனியாரை நம்பியதுதான். கடந்த 15 ஆண்டுகளாக, தமிழ்நாட்டில் புதிதாக கூடுதல் உற்பத்தியே இல்லை. அந்த நடவடிக்கைகளை அரசால் செய்ய முடியும். தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு ஆட்சியிலும் இதுதான் நிலைமை. கூடங்குளத்தில் 700 மெகாவாட் வருகிறது என்பதால், எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று சொல்ல முடியாது. ஒரு பெரிய முன்னேற்றம் என்பது தமிழ்நாட்டிற்கு கிடைத்துவிடாது. கம்பி மூலம் ஏற்படும் மின்சார இழப்பை குறைப்பது உள்ளிட்ட சேமிப்பு நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.
தேவசகாயம்
இது மிகவும் முக்கியமான கருத்து. புதிய மின் உற்பத்தி இல்லாமல் போனதற்கு முழுக் காரணமும் மத்திய அரசுதான். 1995-96ல் மின்சார சீர்திருத்தம் என்று ஆரம்பித்தார்கள். அப்போது அது தொடர்பான குழுவில் நான் இருந்தேன். முதலில் மின் உற்பத்தியை தனியார்மயப்படுத்த வேண்டும் என்று சொன்னார்கள். முதலில் விநியோகத்தை சரிசெய்துவிட்டு, திறனை உயர்த்திவிட்டு, மின்சார வாரியங்களை வலுப்படுத்திவிட்டு, அதன் பிறகு உற்பத்தியில் தனியாரிடம் செல்லுங்கள் என்று நான் சொன்னேன். அதற்காக குழுவில் இருந்து என்னை நீக்கிவிட்டார்கள். தனியார் மின் உற்பத்தியாளர்களை அழைத்தார்கள். எந்த மின்வாரியமும் கூடுதலாக மின் உற்பத்தி செய்யக்கூடாது என்று உத்தரவு போட்டார்கள். இங்கு வந்த தனியார் மின் உற்பத்தியாளர்கள் அனைவரும், அமெரிக்காவில் நடந்த இரட்டைகோபுர தாக்குதலுக்குப் பிறகு இங்கிருந்து ஓடி விட்டார்கள். மின் உற்பத்தியில் முன்னணியாக திகழ்ந்த என்.டி.பி.சி.யில் புதிதாக ஒரு திட்டமும் கிடையாது. கடந்த ஆண்டு 3000 மெகாவாட் தான் உற்பத்தி செய்தனர். ஆறு ஆண்டுகளாக தமிழ்நாடு மின்சார வாரியம் 250 மெகாவாட் தான் உற்பத்தி செய்கிறது.
புதிய தலைமுறை
முக்கியமான இரண்டு விஷயங்கள் குறித்து யோசிக்க வேண்டியுள்ளது. எதிர்காலத்தில், அதாவது 10 ஆண்டுகளுக்கு அல்லது 20 ஆண்டுகளுக்குப் பிறகு என்ன நடக்கும், அப்போது மின்சாரத்துக்கான ஆதாரம் என்னவாக இருக்கும் என்கிற ஒரு விஷயம். வரப்போகிற கோடை காலத்தை எப்படி சமாளிக்கப்போகிறோம் என்பது உடனடி கவலை.
தேவசகாயம்
அரியானா மின்சார வாரியத்தின் தலைவராக இருந்தபோது, நான் எடுத்த நடவடிக்கைகளையே இதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும். தேவை (need) என்பதற்கும், இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் (demand) என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. டிமாண்ட், டிமாண்ட், டிமாண்ட் என்று சொல்லிக்கொண்டிருப்பதில் உண்மையில்லை. பற்றாக்குறை இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு வெளியிடங்களில் இருந்து மின்சாரத்தை கூடுதலாக வாங்கிக்கொண்டே இருந்தால் பிரச்சினை தீரவே தீராது. Demand, need ஆகிய இரண்டையும் சரியாக நிர்வாகம் செய்ய வேண்டும்.
புதிய தலைமுறை
தமிழகத்தின் மின்சார பற்றாக்குறை 3000 மெகாவாட். கூடங்குளத்தில் யூனிட் 1, யூனிட் 2 ஆகிய இரண்டையும் சேர்த்தால் சுமார் 800 மெகாவாட் கிடைக்கும். கிட்டத்தட்ட மாநிலத்தின் மின்பற்றாக்குறையில் மூன்றில் ஒரு பகுதி.
தேவசகாயம்
மாற்று வழி நிறையவே இருக்கிறது.
புதிய தலைமுறை
மாற்று இருக்கிறது என்று சொல்கிறீர்கள். ஆனால் அது எப்போது என்பது தானே கேள்வி? 20 ஆண்டுகள் கழித்து வரும் என்றால் அதுவரைக்கும் மின்சாரத் தேவைகளுக்கு என்ன செய்வது?
தேவசகாயம்
நிர்வாகத்தை சரியாகச் செய்தால் நிச்சயமாக ஆறே மாதங்களில் பிரச்சினையைத் தீர்க்க முடியும். தேவையும் குறையும். அரியானாவில் அதை நான் நிருபித்துக்காட்டியிருக்கிறேன்.
No comments:
Post a Comment