Tuesday, 31 May 2011

வரவு எட்டணா.... செலவு ஏழணா...





-ஆ.பழனியப்பன்




அரசு நிர்வாகத்தில் செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாயும் மிக முக்கியமானது. ஒரு ரூபாதானேஎன்று அலட்சியம் காட்டக்  கூடாது. ஒவ்வொரு ரூபாயையும் பார்த்துப் பார்த்து செலவு செய்கிற அரசே, சிறந்த அரசாக இருக்க முடியும். மக்களின் தேவைகள் அனைத்தையும் சிறப்பாக நிறைவேற்ற முடியும். கடன் வாங்காமலே செயலாற்ற முடியும்.
தேவையற்ற செலவுகளையும், தேவையற்ற திட்டங்களையும் குறைக்க வேண்டும். அதற்கான திறமைகளையும், பொறுப்புணர்வையும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் உருவாக்க வேண்டும். இதெல்லாம் சாத்தியமாகுமா என்ற கேள்வி எழலாம். நிச்சயம் இது சாத்தியமேஎன்பதை நிரூபித்து பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது தமிழ்நாடு குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியம். 
அரசு - பொதுமக்கள் கூட்டு முயற்சி’ (Public Public Partnerships - PUPs) என்கிற புதிய திட்டத்தின் மூலமாக, மக்களுக்கான குடிநீர் திட்டங்களை மக்களின் பங்கேற்புடன் மிகச் சிறப்பாக நிறைவேற்றி இருக்கிறார்கள் குடிநீர் வாரியப் பொறியாளர்கள். இத்திட்டத்தின் மூலமாக சுமார் 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்தி இருக்கிறது குடிநீர் வாரியம். இந்த வெற்றியின் மூலமாக, உலகத்திற்கே வழிகாட்டும் திட்டமாக இது மாறியிருக்கிறது. அப்படி என்னதான் அவர்கள் செய்து விட்டார்கள்?
சுமார் 20 ஆண்டுகளாக அரசுத் துறைகளின் பல்வேறு திட்டங்கள் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது, அரசு-தனியார் கூட்டு முயற்சி (Public Private partnerships -PPP) என்று அழைக்கப்படுகிறது. அரசுத் துறைகள் என்றாலே, அங்கு போதிய கட்டமைப்பு வசதிகள் இருக்காது, நவீனத் தொழில்நுட்பங்கள் இருக்காது, நிர்வாகத் திறமை குறைவாக இருக்கும், லஞ்சம் ஊழல்கள் இருக்கும், நிதி விரயம் இருக்கும் என்கிற விமர்சனங்கள் பொதுவாகவே உண்டு. எனவே, நாட்டிற்குத் தேவையான வளர்ச்சித் திட்டங்களை தனியாருடன் கூட்டு சேர்ந்து நிறைவேற்றுவதுதான் சரியானது என்கிற கருத்தும் ஒரு சாராரிடம் உண்டு. அதேநேரத்தில், அரசின் செயல்பாடுகள் மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டவை. தனியாரின் செயல்பாடுகள் என்பது லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டவை. எனவே, அரசுத் திட்டங்களை நிறைவேற்றுவதில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது சரியல்ல என்கிற வாதமும் இன்னொரு தரப்பால் முன்வைக்கப்படுகிறது.
இந்நிலையில்தான், தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிற அரசு-தனியார் கூட்டு முயற்சி என்கிற திட்டத்திற்கு மாற்றாக, ‘அரசு-பொதுமக்கள் கூட்டு முயற்சிஎன்கிற புதிய கான்சேப்ட் ஒன்று தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியத்தில் இத்திட்டம் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டது.
2004ம் ஆண்டு குடிநீர் வாரியத்திற்கு பெரும் சவால் மிகுந்த ஆண்டாக இருந்தது. அப்போது கடுமையான வறட்சி நிலவியது. நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்தது. நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதில் நிறைய குறைபாடுகள் இருந்தன. எனவே, தமிழ்நாட்டில் கடுமையான அளவுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது.
அந்த நெருக்கடியை எப்படியாவது சமாளித்தாக வேண்டும் என்ற கட்டாயம் குடிநீர் வாரியத்திற்கு ஏற்பட்டது. குடிநீர் வாரியத்தின் பல திட்டங்களுக்கு உலக வங்கி உள்ளிட்ட அமைப்புகள் நிதியுதவி செய்து வருகின்றன. தண்ணீர் நெருக்கடியை சமாளிப்பதற்கு அவர்கள் சில யோசனைகளைத் தெரிவித்தார்கள். குடிநீர் வாரியத்தை பல பிரிவுகளாகப் பிரித்து தனியாரிடம் ஒப்படைத்துவிடலாம் என்பது அந்த யோசனைகளில் ஒன்று. ஆனால், அது நல்ல பலனைத் தராது. நிலைமையை இன்னும் மோசமாக்கும் என்று கருதினர் குடிநீர் வாரியப் பொறியாளர்கள்.
அடிப்படையான பல மாற்றங்களை வாரியத்தில் கொண்டுவர வேண்டியது அவசியம் என்று பொறியாளர்கள் நினைத்தனர். வாரியத்தின் நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்களையும், மாற்றங்களையும் கொண்டு வருவதற்காக ஓடெக் (ˆணூஞ்ச்ணடிண்ச்ணாடிணிணச்டூ ஈஞுதிஞுடூணிணீட்ஞுணணா ச்ணஞீ உதுஞிஞுடூடூஞுணஞிஞு இணிணண்தடூணாச்ணணாண்  ˆஈஉஇ) என்ற அமைப்பை உதவிக்கு அழைத்தனர். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், மேலாண்மை வல்லுநருமான டாக்டர் வி.சுரேஷ் இந்த அமைப்பின் நிர்வாகி. முதல் நடவடிக்கையாக, ‘தண்ணீர் மேலாண்மையை ஜனநாயகப்படுத்துதல்’ (Democratisation of Water Management) என்கிற முயற்சி தொடங்கப்பட்டது.
"முதலில், வாரியத்தைச் சேர்ந்த பொறியாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு நிர்வாகம் தொடர்பான சில பயிற்சிகள் வழங்கினோம். அதன் பிறகு, துறையின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதற்காகவும், பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் கூடுதல் பொறுப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் புதுமையான பல நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதன் மூலமாக, துறைக்கு உள்ளேயே நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்தோம். திட்டங்களை நிறைவேற்றுவதில் பொதுமக்களையும் பங்கேற்கச் செய்தோம். அந்தப் புதுமையான முயற்சி மிகப் பெரிய வெற்றி அடைந்துள்ளது" என்கிறார் டாக்டர் வி.சுரேஷ்.
தமிழகத்தின் 29 மாவட்டங்களில் குறிப்பிட்ட சில கிராமப் பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டு அப்பகுதிகளில் கவனம் செலுத்தப்பட்டது.  முதலில், குடிநீர் வாரியத்தைச் சேர்ந்த சுமார் 160 பொறியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது, நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பது போன்ற விஷயங்களை முன்வைத்து பஞ்சாயத்துத் தலைவர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், தலித் மக்கள், இளைஞர் அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினர் மத்தியில் குடிநீர் வாரியப் பொறியாளர்கள் பணியாற்றினர்.
கிராமங்களில் பயிற்சி முகாம்கள், பயிலரங்குகள், கூட்டங்கள் ஆகியவற்றை நடத்தினர்.  தண்ணீர் சிக்கனம், தண்ணீர் பாதுகாப்பு போன்றவற்றை மையமாக வைத்து வீதி நாடகங்கள் மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மூலமாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சிகளில் உள்ளூரைச் சேர்ந்த பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் ஆகியோரையும் பங்கெடுக்கச் செய்துள்ளனர். அரசுத் திட்டங்களைச் சேயல்படுத்துவதில் பொதுமக்களையும் பங்குதாரராக மாற்றுவது என்கிற மிகப் பெரிய மாற்றம் அங்கு நிகழ்ந்தது.
"புதிய குடிநீர் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட கிராம மக்களுடன் குடிநீர் வாரியப் பொறியாளர்கள் அமர்ந்து பேசுவார்கள். அங்கு நிலத்தடி நீர்மட்டம் எவ்வளவு, தண்ணீர்த் தேவை எவ்வளவு என்பன போன்ற விவரங்களை விவாதிப்பார்கள். மூன்று பம்புசேட்டுகள் போட்டால் 10 ஆண்டுகளுக்கு பயன்படுத்தக் கூடிய தண்ணீர் ஆறு ஆண்டுகளுக்குள் தீர்ந்துவிடும். எனவே, மூன்றுக்குப் பதிலாக 2 பம்புசேட்டுகள் போடலாம் என்று கூறுவார்கள். அதேபோல, அதிக குதிரைத்திறன் கொண்ட மோட்டார்களுக்குப் பதிலாக, குறைந்த குதிரைத்திறன் மோட்டாரை பயன்படுத்தினால் நீண்டகாலத்திற்கு தண்ணீரைப் பயன்படுத்த முடியும் என்று கிராம மக்களிடம் எடுத்துச் சொல்வார்கள். தண்ணீர் சிக்கனத்தின்முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்ட தஞ்சை, திருவாரூர் உட்பட 5 மாவட்டங்களைச் சேர்ந்த கிராம மக்கள் தங்களுக்குப் புதிய திட்டங்கள் வேண்டாம் என்று கூறிவிட்டனர். பல கிராமங்களில் மக்கள் தாங்களாகவே முன்வந்து கண்மாய்களை ஆழப்படுத்தியும் இருக்கிறார்கள்" என்கிறார் ஓவுபெற்ற தலைமைப் பொறியாளர் ஒருவர்.
"குடிநீர் வாரியத்தில் பல திட்டங்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டன. தேவையில்லாத பல திட்டங்கள் கைவிடப்பட்டன. அதன் மூலமாக நீர் ஆதாரம் அதிகரித்ததுடன், சுமார் 100 கோடி ரூபாய் அளவிற்கு அரசுப்பணம் மிச்சப்படுத்தப்பட்டது. இத்திட்டம் வெற்றியானதுடன் உலக அளவிலும் பிரபலம் அடைந்துள்ளது. இத்திட்டத்தின் அனுபவங்களை அறிந்து கொள்வதற்காக, தமிழ்நாடு குடிநீர் வாரிய பொறியாளர்களை அழைத்து ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநிலங்களின் குடிநீர் வாரியப் அதிகாரிகள் விவாதித்தனர். இத்திட்டத்திற்கு ஐ.நா. மன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது. தங்கள் நாட்டிலும் இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று ஸ்பெயின் உட்பட 15 நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் என்னிடம் விவாதித்துவிட்டுச் சென்றுள்ளனர். சவுத் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இத்திட்டம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்" என்கிறார் டாக்டர் வி.சுரேஷ்.
உலகத்திற்கு வழிகாட்டியாக மாறிவிட்ட இந்த முன்னோடித் திட்டத்தை, அனைத்துத் துறைகளுக்கும் விரிவுபடுத்துவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க  வேண்டும். புதிய அரசு முன்வருமா?

நன்றி: புதிய தலைமுறை

No comments:

Post a Comment